தினகரனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நேருவும், அவரது குடும்பத்தினரும் தங்களையும், தங்கள் சொத்துகளையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர்கள். இந்தியாவை உலக அரங்கில் தூக்கி நிறுத்தியவர் நேரு. அந்த காலத்தில் நாட்டின் விடுதலைக்காக போராடி சிறைக்கு சென்றார்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் லஞ்சம், ஊழல் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்த காரணத்தினால் சிறைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.
தமிழகத்தில் 215 இடங்களில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ரூ.5 ஆயிரம் கோடிக்கான சொத்து ஆவணங்கள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்ததில் முதல் குற்றவாளி சசிகலா தான் என்பதை மறந்துவிடக்கூடாது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் 20 ஆண்டு காலமாக தமிழகத்தை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள்.
வருமான வரி சோதனையில் அரசியல் இருப்பதாக நினைக்கவில்லை. இந்த சோதனையை ஜெயலலிதா காலத்திலேயே நடத்தி இருக்க வேண்டும். தற்போது காலம் தாழ்த்தி நடத்தி இருக்கிறார்கள்.
சசிகலாவை சிறையில் இருந்து அழைத்து வந்து தனிமைப்படுத்தி விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும். டி.டி.வி.தினகரனை வெளியே விட்டு வைக்கவே கூடாது. ‘அதிகபட்சமான ஜெயில் தண்டனை என்றால் 20 ஆண்டுகள் தான், 20 ஆண்டுகள் கழித்து வந்து எல்லோரையும் பழிவாங்குவேன்’ என்று அவர் சொல்கிறார்.
ஒரு குற்றவாளி இப்படி பேசுவதை எப்படி மத்திய–மாநில அரசுகள் பொறுத்துக்கொண்டு இருக்கின்றன. தினகரனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.