நளினியை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதை கருதி, மனிதாபிமான அடிப்படையில் தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி, நளினி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
1994ம் ஆண்டு அரசாணைப்படி 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கலாம் என்று நளினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதற்கு உரிய பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில், உள்துறை துணை செயலாளர் தேவாசீர்வாதம் உயர்நீதிமன்றத்தில் இன்று பதில்மனு தாக்கல் செய்தார். அதில் நளினி உள்ளிட்டோரை விடுவிப்பதற்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.