Breaking News
மதுவுக்கு எதிராக தீவிர போராட்டங்களை பா.ம.க. நடத்தும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட தடை நகர்ப் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும், அப்பகுதிகளில் மதுக்கடைகளை தாராளமாக நடத்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு விளக்கமளித்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றில் கவனம் செலுத்தாத அ.தி.மு.க. அரசு மதுக்கடைகளை திறப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்டதால் தமிழ்நாட்டு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் போராட்டம் நடத்தி விலக்கு பெற நடவடிக்கை எடுக்காத முதல்-அமைச்சர் மது விற்பனைக்காக மட்டும் துடிப்பதில் இருந்தே அவர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்பதை உணர முடியும். தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறையற்ற ஆட்சி தான் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான முயற்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நோக்கம் ஆகும். அதில் இருந்து பா.ம.க. ஒருபோதும் பின்வாங்காது.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அதை உணர்ந்து மதுவுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை பா.ம.க. நடத்தும்; வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.