சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது
கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட ஏ.வி.உண்ணி கிருஷ்ணன், மாளிகைப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட அனீஷ் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் முழங்க சுவாமி அய்யப்பனை தரிசித்தனர். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று நடைபெறவில்லை.
இன்று முதல் (வியாழக்கிழமை) புதிய மேல்சாந்தி நடையை திறந்து பூஜைகள் செய்ய உள்ளார். அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 11.30 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெற்று, உச்ச பூஜை முடிவடைந்ததும் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகமானால் தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறப்பு நேரங்களில் மாறுதல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 26–ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14–ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.