Breaking News
தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் சரவணன் நேரில் ஆஜராக சம்மன்

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.

விசாரணையை தொடங்கிய அவர், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை தகுந்த ஆவணங்களுடன் அளிக்கலாம்’ என்று தெரிவித்தார். அதன்படி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் அடங்கிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரும் படிவத்தில், ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டதில் குளறுபடி நடந்திருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், ஆஸ்பத்திரி வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மனு அளித்த டாக்டர் சரவணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியுள்ளார்.

அதில், ‘வருகிற 22–ந் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகி தாங்கள் பிரமாண பத்திரத்துடன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் மூல ஆவணங்களை கொண்டுவந்து இந்த விசாரணை சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கோரப்படுகிறீர்கள். குறிப்பிட்ட நாளில் ஆஜராக தவறினால் தாங்கள் இல்லாமலேயே ஆணையம், விசாரணையை மேற்கொண்டு முடிவு செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.