அமிதாப் பச்சன் சென்ற காரின் சக்கரம் கழன்று ஓடியது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு மாநில அரசு கிடுக்கிப்பிடி
கொல்கத்தாவில் கடந்த 10–ந் தேதி, சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மேற்கு வங்காள அரசின் அழைப்பின் பேரில், அதில் இந்திப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மறுநாள், அவர் மும்பை திரும்புவதற்காக, மாநில அரசின் ஏற்பாட்டில் ஒரு டிராவல்ஸ் நிறுவன காரில் கொல்கத்தா விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நடுவழியில், அந்த காரின் பின்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியது. நல்லவேளையாக அமிதாப் பச்சன் காயமின்றி உயிர் தப்பினார். பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மூத்த மந்திரியின் காரில் ஏறி அவர் விமான நிலையத்துக்கு சென்றார்.
இதற்கிடையே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திடம் மேற்கு வங்காள அரசு விளக்கம் கேட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில், காரின் தகுதி சான்றிதழ் காலாவதி ஆனது தெரியவந்துள்ளதாகவும், அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.