ஜிம்பாப்வே அதிபர் பத்திரமாக வெளியேற அனுமதியா?
ஜிம்பாப்வேவில் கடந்த 37 ஆண்டுகளாக அந்த நாட்டின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்து வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93).
அவர் வயோதிகம், உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை சமீப காலமாக குறைத்துக்கொண்டார். அவருக்கு பின்னர் அவரது இடத்தை கைப்பற்றுவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார்.
ஆனால் ராபர்ட் முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபே (52) அதிகார போட்டியில் குதித்தார். ராபர்ட் முகாபே, மனைவிக்கு ஆதரவாக செயல்பட்டார். துணை அதிபர் மனன்காக்வாவை பதவி நீக்கம் செய்தார். இது ராணுவத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஜிம்பாப்வே அரசு தொலைக்காட்சி நிலையத்தை ராணுவம் கைப்பற்றியது. தலைநகரில் ராணுவம் களம் இறங்கியது.
ராபர்ட் முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதிபரின் மனைவி கிரேஸ் என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையே ராபர்ட் முகாபே பத்திரமாக வெளியேறுவது தொடர்பாக ராணுவ தலைமையுடன் கத்தோலிக்க பாதிரியார் பிடெலிஸ் முகோனோரி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.