ஜி.எஸ்.டி. வரி திட்டத்தில் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க புதிய ஆணையம்
நாடு முழுவதும், பல்வேறு வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்று நான்கு விகிதங்களில் இந்த வரி விதிக்கப்படுகிறது.
வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று ஏற்கனவே பல பொருட்கள், சேவைகள் மீதான சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்டு உள்ளது.
வரி குறைப்பு சலுகை முறைப்படி மக்களை சென்று அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. அதாவது வரி குறைந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையும் குறைய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு வரிச்சலுகையின் பலன் கிடைக்கும்.
ஆனால் பழைய விலையிலேயே பொருட்களை விற்பனை செய்தால், வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்குமே தவிர மக்களுக்கு வரிச்சலுகையின் பயன் கிடைக்காமல் போய்விடும்.
இத்தகைய முறைகேடு நடைபெறுவதை தடுக்கும் வகையில், அதாவது நியாயமற்ற முறையில் வியாபாரிகள் லாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் உயர்மட்ட அளவில் தேசிய அளவிலான ஆணையம் ஒன்றை அமைக்க நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.