மற்ற மாநில கவர்னர்களை விட டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது
டெல்லி யூனியன் பிரதேசத்தில், கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே அதிகார போட்டி நடந்து வருகிறது. டெல்லியின் ஆட்சி நிர்வாக தலைவர் கவர்னர்தான் என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுபோல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ‘மந்திரிசபையின் அறிவுரையின்பேரில்தான் கவர்னர் செயல்பட முடியும், அவர் டெல்லியை ஆள முடியாது’ என்று டெல்லி அரசின் வக்கீல் ராஜீவ் தவான் வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், ‘அரசியல் சட்டத்தின் 163–வது பிரிவின்படி, தனது தனிப்பட்ட உரிமையை காண்பிப்பதற்கான நிகழ்வுகளை தவிர மற்ற நேரங்களில் மந்திரிசபையின் அறிவுரையின்பேரில்தான் கவர்னர் செயல்பட வேண்டும். ஆனால், டெல்லியில், கவர்னரது தனிப்பட்ட உரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களில், சட்டசபை சட்டம் இயற்ற முடியாது. எனவே, மற்ற மாநில கவர்னர்களை விட டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது’ என்று கூறினர்.