Breaking News
உலக ஆக்கி லீக்: இந்திய அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம்
உலக ஆக்கி லீக் (இறுதி சுற்று) போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் டிசம்பர் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் கால்இறுதி ஆட்டம் நடைபெறும்.

தொடக்க நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனி-இங்கிலாந்து (மாலை 4.45 மணி), இந்தியா-ஆஸ்திரேலியா (இரவு 7.30 மணி) மோதுகின்றன. இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் 2-ந் தேதி இங்கிலாந்தையும், 4-ந் தேதி ஜெர்மனியையும் எதிர்கொள்கிறது.

உலக ஆக்கி லீக் (இறுதி சுற்று) போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் பிடித்து இருந்த முன்னாள் கேப்டனும், நடுகள வீரருமான சர்தார்சிங் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட ருபிந்தர் பால்சிங், பிரேந்திர லக்ரா ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இடம் பெறவில்லை. கேப்டனாக மன்பிரீத்சிங் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சிங்லென்சனா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:- கோல்கீப்பர்கள்: ஆகாஷ் அனில் சிக்தே, சுரஜ் கர்கெரா, பின்களம்: ஹர்மன்பிரீத்சிங், அமித் ரோஹிதாஸ், திப்சன் திர்கே, வருண்குமார், ருபிந்தர் பால்சிங், பிரேந்திர லக்ரா, நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), உத்தப்பா, சுமித், கோதாஜித்சிங், முன்களம்: எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப்சிங், மன்தீப்சிங், லலித்குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங்.

பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோட் மர்ஜின் கருத்து தெரிவிக்கையில், ‘அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சரியான அளவில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதிப்போட்டி போல் நினைத்து விளையாடுவோம். உலகின் சிறந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் தவறு இழைக்காமல் விளையாட வேண்டும். பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். அனுபவம் வாய்ந்த ருபிந்தர், பிரேந்திரா ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது நல்ல விஷயமாகும்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.