சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆள் இல்லாத விமானங்கள் மூலமும் கண்காணிக்க நடவடிக்கை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்து வருகின்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன், சபரிமலை பாதுகாப்பு தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யுமான சுதேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.பம்பை, சன்னிதானம் உள்பட முக்கிய பகுதிகள் ஆள் இல்லாத விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும். அவற்றின் மூலம் கிடைக்கும் வீடியோ தகவல்கள் மற்றும் படங்கள் கட்டுப்பாட்டு அறை மூலம் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சபரிமலையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை நிதியில் இருந்து ரூ.5½ கோடி செலவில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் இருதய அவசர சிகிச்சை பிரிவு உள்பட நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.