ஜி.எஸ்.டி குறைந்தாலும் சில ஓட்டல்களில் விலை உயர்த்தி லாபம் பார்க்கும் உரிமையாளர்கள்
ஜி.எஸ்.டி குறைந்தாலும் சில ஓட்டல்களில் விலை முரண்பாடாக உள்ளது. இதனால் சில ஓட்டல்களில் உணவு விலையை உயர்த்தி அதன் உரிமையாளர்கள் லாபம் பார்க்கின்றனர்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வளையத்துக்குள் ஓட்டல் தொழிலும் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஜூலை 1–ந்தேதி முதல் ஏ.சி. வசதியுடைய ஓட்டல்களுக்கு 18 சதவீதமும், ஏ.சி. வசதி இல்லாத ஓட்டல்களுக்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது. இதனால் ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த 11–ந்தேதி அசாமில் நடந்த 23–வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஓட்டல்களுக்கான ஜி.எஸ்.டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 15–ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஓட்டல்களில் 5 சதவீத ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதால் அதற்கேற்ப விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சில ஓட்டல்கள் லாபநோக்கத்தை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி குறைப்பை ஈடு செய்யும் வகையில் உணவு விலையை உயர்த்தி உள்ளது.
உதாரணமாக சென்னை எழும்பூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் ஜி.எஸ்.டி உயர்வின் போது ரவா மசாலா தோசை ரூ.84.75, காபி ரூ.29.68 ஆகியவற்றுடன் ஜி.எஸ்.டி சேர்த்து ரூ.135 ஆக ஒரு வாடிக்கையாளரிடம் பெறப்பட்டது.
அதே சமயம் ஜி.எஸ்.டி குறைப்புக்கு பின்னர் ரவா மசாலா தோசை ரூ.95 ஆகவும், காபி ரூ.33 ஆகவும் விலையை உயர்த்தி ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.134 ஆக வசூலிக்கப்பட்டது.
18 சதவீதம் ஜி.எஸ்.டி.யின் போது வாடிக்கையாளரிடம் ரூ.135 பெற்ற ஓட்டல் நிர்வாகம், 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கும் அதே அளவு தொகையை வாங்கி உள்ளது.
ஜி.எஸ்.டி.யை குறைத்த பிறகும் இதேபோல் சில ஓட்டல்களில் உணவு விலையை உயர்த்தி ஓட்டல் நிர்வாகம் லாபம் பார்க்கிறது. இந்த முரண்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் கையில் கிடைக்க வேண்டிய காசு, ஓட்டல் உரிமையாளர்களை சென்றடைகிறது.
எனினும் ஜி.எஸ்.டி குறைப்பை வரவேற்றுள்ள பெரும்பாலான ஓட்டல் உரிமையாளர்கள் மனசாட்சிபடி அதற்கேற்ப விலையை குறைத்துள்ளனர். எழும்பூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் ஜி.எஸ்.டி உயர்வுக்கு முன், குறைவுக்கு பின் என்று விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
அதில் பழைய விலையில் இட்லி ரூ.34, புரோட்டா ரூ.67, தோசை ரூ.63–க்கு விற்கப்பட்டதாகவும், புதிய விலையில் இட்லி ரூ.31, புரோட்டா ரூ.63, தோசை ரூ.58–க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.112–க்கு விற்பனையான மதிய உணவு ரு.105 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. பிரபல அசைவ ஓட்டல் ஒன்றில் ரூ.213–க்கு விற்பனையான சிக்கன் பிரியாணி ரூ.200–க்கும், ரூ.235–க்கு விற்பனையான மட்டன் பிரியாணி ரூ.220–க்கும் விலை குறைந்துள்ளது.
மத்திய அரசு ஜி.எஸ்.டி அதிகம் வசூலித்த போது, எதிர்ப்பு தெரிவித்த ஓட்டல் உரிமையாளர்கள் தற்போது ஜி.எஸ்.டி குறைப்புக்கு ஏற்ப விலையை குறைக்க முன் வர வேண்டும். விலையை குறைக்காத ஓட்டல்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.