தினகரன் தனிக்கட்சி?
இரட்டை இலை சின்னம் பறிபோன பின்பு தினகரன் புதிதாக தனிக்கட்சி துவங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
அ.தி.மு.க.,விற்கும், தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அவர் நீதிமன்றத்திற்கு சென்றாலும், கட்சியையோ, சின்னத்தையோ பெறுவது சிரமம். அ.தி.மு.க., என்ற பெயரையே, அவர் பயன்படுத்த முடியாது என்பதால், அவர் அரசியலில் நீடிக்க, புதிதாக கட்சி துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அவ்வாறு கட்சி துவக்கினால், அதை, தேர்தல் கமிஷனில், பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பே, தனி சின்னத்தை பெற முடியும்.
தற்போதுள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில், அவர் சுயேச்சை வேட்பாளராகவே களம் காண முடியும். கடந்த முறை கிடைத்த தொப்பி சின்னத்தை, மீண்டும் பெறுவதிலும், தினகரனுக்கு சிக்கல் ஏற்படும்.
ஆர்.கே.நகர் மக்கள் கூறுகையில், ‘காசுக்கு ஓட்டு வாங்கி விடலாம் எனக் கணக்கு போடுபவர்களை, நாங்கள் தொகுதிக்குள்ளேயே நுழைய விட மாட்டோம்’ என்றனர்.