‘திபெத்’திற்கு விடுதலை அல்ல வளர்ச்சி தேவை: தலாய் லாமா தடாலடி
திபெத்தில் வளர்ச்சியை தான் நாங்கள் விரும்புகிறோம். சீனாவிடமிருந்து தனிநாடு பெற வேண்டும் என்பது அல்ல என புத்தமத தலைவர் தலாய்லாலா தெரிவித்துள்ளார்.
சீனா 1951-ம் ஆண்டு முதல் திபெத்தை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. திபெத்திற்கு சுயாட்சி வழங்க வேண்டும் என, நாடு கடந்த திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா, அவரது பிரதிநிதிகள் மற்றும் அரசுப்பிரதிநிதிகள் பல வழிகளில் முயற்சித்தும் தோல்வியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, திபெத் விடுதலையை பொறுத்தவரை நடந்தது நடந்தவைகளாக இருக்கட்டும், சீனா தனது நாட்டை எந்தளவுக்கு நேசிக்கிறதோ, அதே போன்று தான் நாங்கள் திபெத்தை நேசிக்கிறோம்.
நாங்கள் திபெத் தனி நாடு கோரிக்கையை முன் வைக்கவில்லை.. மேன்மேலும் வளர்ச்சியடைவதை தான் எதிர்பார்க்கிறோம். அதற்கான நடவடிக்கையை சீனா எடுக்க வேண்டும். திபெத் கலாச்சாரம் வித்தியாசமானது. திபெத்தின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு சீனா மதிப்பளிக்க வேண்டும்.இவ்வாறு தலாய் லாமா பேசினார்.