ஆதார்’ இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்?
அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெறுவதற்காக, அவற்றுடன் ‘ஆதார்’ எண் இணைப்பதற்கான அவகாசத்தை, 2018 மார்ச் 31 வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் இணைப்பு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு திட்டங்களின் பயனை பெறுவதற்காக, ஆதார் இணைப்பதற்கான அவகாசத்தை, 2018 மார்ச், 31 வரை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின், நீதிபதிகள் கூறுகையில், ‘டில்லி, ஒரு மாநிலம் அல்ல என்றும், அதன் நிர்வாக தலைவர், துணைநிலை கவர்னர் என்றும், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ‘இதை எதிர்த்து, டில்லி அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடிந்த பின், ஆதார் இணைப்பு தொடர்பான மனுக்களை விசாரிக்கிறோம்’ என்றனர்.
முன்னதாக, அக்., 30ல், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும்’ என, கூறியிருந்தது.