உடல் உறுப்பு தானம்: தமிழகம் தொடர்ந்து முதலிடம்
உடல் உறுப்புகள் தானத்தில், தமிழகம், தொடர்ந்து மூன்றாவது முறையாக, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
டில்லியில், எட்டாவது, தேசிய உடல் உறுப்பு தான நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அப்போது, உடல் உறுப்பு தானத்தில், தேசிய அளவில் மூன்றாவது முறையாக முதலிடம் பெற்ற, தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுபிரியா பட்டேல், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், விருதை வழங்கினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில், 2014ல், உடல் உறுப்பு தான இயக்கம் துவக்கப்பட்டது. இதுவரை, 1,056 பேரிடம் இருந்து, 5,933 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. அரசு மருத்துவமனைகளில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு, 35 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இரண்டாம் நிலை நகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதற்கு, மூளைச்சாவு அடைந்ததற்கான சான்றிதழ் கட்டாயம் பெறப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”தமிழகம், உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்க, வெளிப்படை தன்மையே முக்கிய காரணம். ”உடல் உறுப்பு தானம் குறித்து, தமிழக மக்களிடம் விழிப்புணர்வு, சிறந்த ஒத்துழைப்பும் உள்ளது,” என்றார்.