ஏழைகளுக்கு, ‘ரெடிமேட்’ வீடுகள் : ஐ.ஐ.டி. களமிறக்கம்
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு, குறைந்த செலவில் வீடுகள் கட்டி கொடுப்பதற்காக, மாற்று கட்டுமான தொழில்நுட்பங்களை பெற, சென்னை, ஐ.ஐ.டி.,யுடன், குடிசை மாற்று வாரியம் கைகோர்க்க உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள, அனைவருக்கும் வீடு திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்தும் பொறுப்பு, குடிசை மாற்று வாரியத்திடம், ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
செலவு குறைப்பு : இதன்படி, பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்படி, ஏழை மக்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்கும் திட்டத்தையும், வாரியம் செயல்படுத்துகிறது.
இதற்காக, நிலங்களை தேர்வு செய்வது, கட்டுமான தொழில்நுட்பங்களை முடிவு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. கட்டடங்கள் கட்டுவதில் ஏற்படும் கூடுதல் செலவை குறைப்பதற்காக, மாற்று தொழில்நுட்பங்களை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் இதற்காக மாற்று கட்டுமான தொழில்நுட்பங்களை பரிந்துரைக்கும் அமைப்பாக, சென்னை, ஐ.ஐ.டி.,யின் கட்டுமான தொழில்நுட்ப பிரிவை, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து, குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, ஐ.ஐ.டி., கட்டுமான தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி பிரிவில், ‘ஜிப்சம்’ பிளாக்குகளை பயன்படுத்தி, குறைந்த செலவில் வீடுகள் கட்டும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
பலகட்ட சோதனைகளுக்குப் பின், இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றுள்ளது.
அனுமதி : எனவே, பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு, இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக, சென்னை, ஐ.ஐ.டி.,யிடம் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற உள்ளோம். குடிசை மாற்று வாரிய புதிய திட்டங்களில், தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பாக, ஐ.ஐ.டி.,யை சேர்க்க, அரசின் உயர் அதிகார குழு கூட்டத்தில், அனுமதி பெறப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.