‘தென்ஆப்பிரிக்க தொடரிலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம்’ கேப்டன் விராட்கோலி கருத்து
நாக்பூர் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் தற்போது பேட்டிங் செய்யும் பாணியிலேயே ஜனவரி மாதத்தில் தொடங்கும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் விளையாட விரும்புகிறேன். நல்ல நிலைக்கு வந்து விட்டு வேகமாக அடித்து ரன்களை சேர்ப்பது தான் எனது நோக்கமாகும். வேகமாக அதிக ரன் சேர்க்கும் பட்சத்தில் நமது பந்து வீச்சாளர்கள் எதிரணியை மடக்குவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கும். தென்ஆப்பிரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு பயணங்களிலும் இதுபோன்ற ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் நாங்கள் பின்பற்றபோகிறோம். பெரிய சதத்தை அடிக்கவே நான் விரும்புகிறேன். அது அணிக்கு பலன் அளிக்கும். சதம் அடித்த பிறகு கவனத்தை இழந்தால் விரைவில் விக்கெட்டை இழக்க நேரிடும். நிலைத்து நின்று விட்ட பேட்ஸ்மேன், புதிய பேட்ஸ்மேன் போல் அல்லாமல் வேகமாக அடித்து ஆட முடியும். எனது உடல் தகுதி நீண்ட நேரம் பேட்டிங் செய்ய உதவிகரமாக இருக்கிறது.
தொடர்ச்சியாக விளையாடி வரும் புவனேஷ்வர்குமார் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடைவெளி விட்டு போட்டியில் ஆடினாலும் சிறப்பாக பந்து வீசினர்.
தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சை சமாளிக்க இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்களை உருவாக்க சொன்னோம். கொல்கத்தா பிட்ச் அதற்கு ஏற்ப இருந்தது. நாக்பூரில் 2-வது நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்விக்கு பிறகு இலங்கை அணி கேப்டன் சன்டிமால் அளித்த பேட்டியில், ‘டாஸ் வென்றது நல்ல விஷயமாகும். எதிர்பாராதவிதமாக முதல் நாளில் இருந்தே நாங்கள் எல்லா வகையிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டோம். எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை. இந்தியா போன்ற அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 350 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் வெற்றி பெறுவது குறித்தோ? 5 நாட்களும் களத்தில் நிற்பது பற்றியோ? சிந்திக்க முடியும். மேத்யூஸ் போன்ற சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.