Breaking News
நாக்பூர் டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்தது. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. எம்.விஜய் 128 ரன்னும், புஜாரா 143 ரன்னும், கேப்டன் விராட்கோலி 213 ரன்னும், ரோகித் சர்மா ஆட்டம் இழக்காமல் 102 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்து இருந்தது. சமரவிக்ரமா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். கருணாரத்னே 11 ரன்னுடனும், திரிமன்னே 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 384 ரன்கள் தேவை, கைவசம் 9 விக்கெட்டுகள் என்ற நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ்யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் அருமையாக பந்து வீசி இலங்கை அணியினருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

கருணாரத்னே 18 ரன்னிலும், திரிமன்னே 23 ரன்னிலும், மேத்யூஸ் 10 ரன்னிலும், டிக்வெல்லா 4 ரன்னிலும், ஷனகா 17 ரன்னிலும், தில்ருவான் பெரேரா, ஹெராத் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 5-வது வீரராக களம் கண்ட கேப்டன் சன்டிமால் 61 ரன்கள் (82 பந்துகளில் 10 பவுண்டரியுடன்) எடுத்த நிலையில் உமேஷ்யாதவ் பந்து வீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 49.3 ஓவர்களில் 166 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்மல் 31 ரன்னுடன் (42 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் அஸ்வின் 2-வது இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இஷாந்த் ஷர்மா, உமேஷ்யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இரட்டை சதம் அடித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 2-ந் தேதி டெல்லியில் தொடங்கிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்
இலங்கை 205
இந்தியா 610/6 டிக்ளேர்
2-வது இன்னிங்ஸ்

இலங்கை:

சமரவிக்ரமா
(பி) இஷாந்த் ஷர்மா 0
கருணாரத்னே (சி) விஜய்
(பி) ரவீந்திர ஜடேஜா 18
திரிமன்னே (சி) ரவீந்திர ஜடேஜா
(பி) உமேஷ்யாதவ் 23
மேத்யூஸ் (சி) ரோகித்சர்மா
(பி) ரவீந்திர ஜடேஜா 10
சன்டிமால் (சி) அஸ்வின்
(பி) உமேஷ்யாதவ் 61
டிக்வெல்லா (சி) விராட்கோலி
(பி) இஷாந்த் ஷர்மா 4
ஷனகா (சி) லோகேஷ் ராகுல்
(பி) அஸ்வின் 17
தில்ருவான் பெரேரா
எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 0
ஹெராத் (சி) ரஹானே
(பி) அஸ்வின் 0
லக்மல் (நாட்-அவுட்) 31
காமகே (பி) அஸ்வின் 0
எக்ஸ்டிரா 2

மொத்தம் (49.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 166
விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-34, 3-48, 4-68, 5-75, 6-102, 7-107, 8-107, 9-165.

பந்து வீச்சு விவரம்:

இஷாந்த் ஷர்மா 12-4-43-2
அஸ்வின் 17.3-4-63-4
ரவீந்திர ஜடேஜா 11-5-28-2
உமேஷ்யாதவ் 9-2-30-2

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.