புயல் சின்னம் பெயர் ‘ஒகி’?
குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும், 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவெடுக்க உள்ளது.இது குறித்து தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான, ‘தமிழ்நாடு வெதர்மேன்’ இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கரை பகுதிக்கு வராது
குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு, ‘ஒகி'(ockhi) என பெயரிடப்படலாம். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விரைவில் அறிவிக்கும். குமரி அருகே மையம் கொண்டுள்ள புயல் சின்னத்தின் மைய பகுதியை ரேடாரில் காண முடிகிறது. இந்த புயல் சின்னம் கரை பகுதிக்கு வராது. கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் கடற்கரையோரமாக பயணிக்கும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது காற்று வேகமாக வீசி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதியில் மணிக்கு 40 – 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ‘வர்தா’ புயல் போல், இந்த புயல் சின்னம் கரை பகுதியை கடக்காது என்பது நல்ல செய்தி. இதனால் கடும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், மணிக்கு 60 – 70 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உண்டு. குமரி கடலில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.இவ்வாறு இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.