வங்க கடலில் 2 காற்றழுத்த மண்டலம்
வங்கக் கடலில், தென் மேற்கு பகுதியில் இலங்கை அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருந்தது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது.
கன்னியாகுமரி உட்பட, தெற்கு கடலோர மாவட்டங்களை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. ”இது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கன்னியாகுமரி அருகே இன்று நிலை கொள்ளும்,” என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் எச்சரித்து உள்ளார். அதனால், தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் கிழக்கு கேரள மாவட்டங்களுக்கு, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கக் கடலின் கிழக்கு பகுதியில், அந்தமான் அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று வருவதால், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த மண்டலம், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களை நோக்கி நகரும் என, தெரிகிறது.
அதனால், டிச., 4க்கு பின், வட கிழக்கு மாவட்டங்களில், கன மழை எதிர்பார்க்கப்படுகிறது.