குஜராத் சட்டசபை தேர்தல்: 93 தொகுதிகளில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது
குஜராத்தில், இன்று(டிச.,14) இரண்டாம் கட்டமாக, 93 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுப்பதிவு துவங்கியது.
குஜராத் மாநிலத்தில், 182 உறுப்பினர்கள் உள்ள சட்டசபைக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் அறிவித்தது. முதல் கட்டமாக, டிச., 9ல், 89 தொகுதிகளுக்கு, ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 68 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி கட்டமாக, 93 தொகுதிகளில், இன்று ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கியது.
குஜராத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், இடம் பெற்றுள்ள, 14 மாவட்டங்களில், இந்த, 93 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த, 93 தொகுதிகளில், 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.22 கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க உள்ளனர். இதையொட்டி மாநிலத்தில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ள தொகுதிகளில், நேற்று முன்தினத்துடன், பிரசாரம் முடிவடைந்தது. பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோர், தீவிர பிரசாரம் செய்தனர். காங்., சார்பில், கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல், தீவிர பிரசாரம் செய்தார். ஓட்டு எண்ணிக்கை, 18ம் தேதி நடக்கிறது.