20 ஓவர் கிரிக்கெட்டில் 20–வது சதம் அடித்து கெய்ல் சாதனை
வங்காளதேச பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டாக்கா டைனமிட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 69 பந்துகளில் 5 பவுண்டரி, 18 சிக்சருடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேச பிரிமியர் லீக் போட்டியில் கெய்ல் அடித்த 5–வது சதம் இதுவாகும். ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் கெய்ல் விளாசிய 20–வது சதம் இதுவாகும். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் 20 சதம் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை கெய்ல் பெற்றார். அத்துடன் அவர் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் (18) அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடுகையில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் 17 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார்.
குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் அரிய சாதனைகள் படைக்கும் உங்களை 20 ஓவர் கிரிக்கெட்டின் டான் பிராட்மேன் என்று அழைக்கலாமா? என்று கெய்லிடம் கேட்டதற்கு, ‘20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எல்லா நேரங்களிலும் நானே சிறந்த பேட்ஸ்மேன்’ என்று பதிலளித்தார்.