சென்னையில் 4–ந் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி சென்னையில் 4–ந் தேதி (வியாழக்கிழமை) பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் கடந்த 51 ஆண்டுகளாக மாறி மாறி நடைபெற்று வரும் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே விஷயம் ஊழல் மட்டுமே.
நீதிபதி சர்க்காரியா ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 28 ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடங்கி, மிக அண்மையில் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் தேர்வு ஊழல் வரையிலான அனைத்து ஊழல்களிலும் சுருட்டப்பட்ட பணத்தை ஆக்கப்பூர்வமாக உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் முதலீடு செய்திருந்தால் தமிழகம் இன்றைக்கு சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளைத் தாண்டிய வசதிகளுடனும், வளங்களுடனும் செழித்திருக்கும்; வறுமை இருந்திருக்காது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலங்களில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் தழைத்தோங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 8–ம் தேதி தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வரைவையும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதேபோல், தகவல் உரிமை ஆணையத்தை 10 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக விரிவுபடுத்துவதுடன், அதில் அப்பழுக்கற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4–ந் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் பா.ம.க. சார்பில் எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் பா.ம.க.வினரும், ஊழல் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பங்கேற்று ஊழல் ஒழிப்பு திட்டங்களை வலியுறுத்தி குரல் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.