புதிய இணையதளம் தொடக்கம் பொதுமக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எந்த விதமான பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மாவட்ட வாரியாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும், அரசியல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து வந்தார். தனது அரசியல் முடிவை 31-ந் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, 31-ந் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் மூட்டியது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அவரது அரசியல் நடவடிக்கை எவ்வாறு இருக்கும்? என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுக்கு, மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேற்று மாலை ரசிகர்கள் உடனான தனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கும் வகையில் பிரத்தியேக புதிய இணையதள பக்கத்தை ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்.
முன்னதாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் தன்னுடைய வீடியோ காட்சியை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு நிமிடம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர தான் இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு முக்கிய அறிவிப்பு. என்னுடைய பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிற மக்களையும் ஒருங்கிணைத்து, ஒரு குடைக்கு கீழே கொண்டுவரவேண்டும்.
அதற்கான நான், www.rajinimandram.org என்ற இணையதள பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன். அதில் நீங்கள் உங்களுடைய பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவருவோம். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழ்நாடு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
www.rajinimandram.org என்ற இணையதள பக்கத்தில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்றும், உள்நுழை, மகிழ்ச்சி மற்றும் தொடர்பு ஆகியவை தமிழிலும், ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மை, உழைப்பு, உயர்வு, நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும், வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இணையதள செயலி மற்றும் வலைதள பக்கத்தில் உங்களை மன்றத்தின் உறுப்பினராக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலி நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்துதரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும், நல் ஆதரவுடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
நன்றி வணக்கம் என்று ரஜினிகாந்த் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி ரஜினிகாந்த் ரசிகர்களாக பதிவு செய்பவர்களுக்காக இணையதளத்தில் பதிவு செய்க, பெயர், நாடு, தொலைபேசி எண், மின்னஞ்சல் என்று பத்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ரஜினிகாந்துக்கு பல்வேறு பெயர்களில் 15 ஆயிரம் பதிவு பெற்ற ரசிகர் மன்றங்கள் உள்ளன. ஒரு மன்றத்துக்கு தலா 25 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 1990-க்கு பிறகு புதிய ரசிகர் மன்றங்களை பதிவு செய்வதற்கு ரஜினிகாந்த் அனுமதி மறுத்து விட்டார். இதனால் புதிய மன்றங்கள் உருவாகாமல் இருந்தது.
பதிவு செய்யாத மன்றங்கள் மட்டும் 1 லட்சத்துக்கும் மேல் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு மன்றத்துக்கு தலா 25 உறுப்பினர்கள் வீதம் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பதிவு செய்யாத மன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த மன்றங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட உள்ளன.
அத்துடன் படித்தவர்கள், இளைஞர்கள் என்று நிறைய பேரை மன்றங்களில் உறுப்பினர்களாக சேர்க்கும்படி ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கட்சி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது. இதற்காக மண்டபத்தின் வலது புறத்தில் ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதற்காக மாடியில் ஓலை குடிசை அமைத்து பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணிகள் நடக்கிறது. இங்கு ரஜினிகாந்துக்கும், நிர்வாகிகளுக்கும் தனித்தனி அறைகள் கட்டப் படுகின்றன.