Breaking News
ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி நடந்த ‘மெல்போர்ன் ஆடுகளம் மோசமானது’

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரில் 4-வது டெஸ்ட் போட்டி நடந்த மெல்போர்ன் ஆடுகளம் மோசமானது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பிரிஸ்மேன், அடிலெய்டு, பெர்த் ஆகிய இடங்களில் நடந்த முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

ஆடுகளம் மோசமானது

இதற்கிடையில் கடந்த வாரம் மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 327 ரன்னும், இங்கிலாந்து அணி 491 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மொத்தம் 24 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. ஆட்டம் முடிவு காணாமல் போன மெல்போர்ன் ஆடுகளத்தின் தன்மை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ரஞ்சன் மடுகலே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார். அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கசிந்து இருக்கிறது.

ஐ.சி.சி. நடுவர் அறிக்கையில், ‘மெல்போர்ன் ஆடுகளத்தில் பவுன்ஸ் நடுத்தரமாக இருந்தது. ஆனால் வேகம் குறைவாகவே காணப்பட்டது. ஆட்டம் போக, போக வேகத்தின் தன்மையில் குறைவு ஏற்பட்டது. 5 நாட்களிலும் ஆடுகளத்தின் இயல்பு தன்மையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் இடையே சமமான அளவில் போட்டி நிலவ வழிவகுப்பதாக இல்லை. பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க உதவும் வகையிலோ, பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்த போதிய வாய்ப்பு அளிக்கும் வகையிலோ ஆடுகளம் அமையவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கருத்து

ஐ.சி.சி. நடுவரின் அறிக்கைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கருத்து தெரிவிக்கையில், ‘ஆடுகளத்தின் தன்மை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கை இதில் தொடர்புடைய அனைவருக்கும் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பானதாக எங்களது ஆடுகளம் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற விமர்சனம் மீண்டும் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்வோம்’ என்றார்.

ஆடுகளம் சராசரிக்கு குறைவாக இருப்பதாக நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டால் ஒரு தகுதி குறைபாடு புள்ளியும், மோசமானது அல்லது தகுதியற்றது என்று குறிப்பிடப்பட்டால் முறையே 3 மற்றும் 5 தகுதி குறைபாடு புள்ளியும் வழங்கப்படும். ஒரு ஆடுகளம் 5 தகுதி குறைபாடு புள்ளியை பெற்றால் அந்த ஆடுகளத்தில் 12 மாதங்கள் சர்வதேச போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.