தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது ஐகோர்ட்டு கேள்வி
சிவகாசி, சித்தூர் ராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி டாக்டராக பணிபுரிபவர் யு.ஐஸ்வர்யா. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘2015-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி பணிக்கு சேர்ந்தேன். அதே ஆண்டு ஜூலை முதல் ஜனவரி வரை, 6 மாதம் பேறுகால விடுப்பில் சென்றேன். எனக்கு ஜூலை 4-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், முதுகலை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு எழுதினேன். அதில், அதிக மதிப்பெண் பெற்று, முதுகலை மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. 6 மாத பேறுகால விடுப்பில் நான் சென்றதால், 2 ஆண்டு கால பணியை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்று கூறி, என்னை பணியில் இருந்து விடுவிக்க மருத்துவத்துறை இயக்குனர் மறுத்துவிட்டார். இவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
தெய்வீக அமிர்தம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பிரசவம் என்பது ஒரு குழந்தையை மட்டும் கொடுக்கவில்லை. அந்த குழந்தையை பெற்று எடுக்கும் தாய்க்கும் மறுபிறவியை கொடுக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பிரசவித்த தாய்க்கும் ஊட்டசத்துள்ள உணவு, முறையான ஓய்வு, பாசம், அரவணைப்பு தேவை. அப்போதுதான் அவள் தன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி, முறையாக பராமரிக்க முடியும். இந்த உலகில் தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எதுவும் கிடையாது. அதனால் தான் தாய்ப்பாலை தெய்வீக அமிர்தம் என்று அழைக்கின்றனர்.
ஒரு தாயை யார் வேண்டுமானாலும் பராமரிக்கலாம். ஆனால், ஒரு குழந்தையை ஒரு தாயால் தான் முறையாக பராமரிக்க முடியும். அரசாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறையை போதுமான அளவு வழங்கவேண்டும். பிரசவ காலத்துக்கு முன்பும், பின்பும் குழந்தையை பராமரிக்க அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். தமிழக அரசு முதலில், பேறுகால விடுப்பாக 3 மாதங்கள் வழங்கியது. பின்னர், அதை 6 மாதமாக மாற்றியது. தற்போது 9 மாதங்களாக உயர்த்தியுள்ளது. இந்த விடுப்பை முழு சம்பளத்துடன் தமிழக அரசு வழங்கியுள்ளது.
அதிகாரிகளின் அலட்சியம்
அதுபோல மத்திய அரசு கடந்த ஆண்டு பேறுகால விடுப்பு பயன்கள் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, 84 நாட்கள் முதல் 182 நாட்கள் வரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பேறுகால விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
எனவே மனுதாரருக்கு 6 மாதம் பேறுகால விடுப்பை வழங்க மருத்துவத்துறை இயக்குனர் ஏன் மறுக்கிறார்? என தெரியவில்லை. உயர் அதிகாரிகள், அரசின் விதிகளை எல்லாம் காற்றில் தூக்கி வீசி எறிந்துவிட்டு, எப்படி எல்லாம் அலட்சியமாக செயல்படுகின்றனர்? என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த வழக்கு திகழ்கிறது.
எதற்கு விடுப்பு?
டாக்டர் ஐஸ்வர்யாவின் விடுப்பை பேறுகால விடுப்பாக கருத்தில் கொண்டு, ஏற்கனவே மருத்துவ மேற்படிப்பிற்கு தகுதி பெற்ற அவருக்கு வரும் கல்வியாண்டில் தேர்வு நடவடிக்கைகள் ஏதுமின்றி முதுகலை மருத்துவப்படிப்பில் கண்டிப்பாக இடம் வழங்க வேண்டும்.
கடின உழைப்பை தவிர்க்கவும், மன அழுத்தம் இல்லாமல் ஓய்வு எடுக்கவும், குழந்தை பெற்று எடுக்கவும், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும், சத்துள்ள உணவு மற்றும் அன்பை குழந்தைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறையை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு துறை அதிகாரிகள் விரிவான பதிலை அளிக்க வேண்டும்.
குழந்தையின் உரிமை
2016-ம் ஆண்டு தமிழக அரசு பேறுகால விடுப்பை 9 மாதமாக உயர்த்தியுள்ளது போல, மத்திய அரசும் ஏன் உயர்த்தக்கூடாது? பேறுகால விடுப்பை ஓராண்டுக்குள் உயர்த்த வேண்டும் என பிற மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஏன் உத்தரவிடக் கூடாது?. பேறுகால பலன்கள் தேசிய நலன் சார்ந்தவை என்று அறிவித்து ஏன் சட்டம் இயற்றக்கூடாது?.
பெற்ற தாயிடம் குறைந்தது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை, தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் அடிப்படை உரிமை என்று இந்த ஐகோர்ட்டு ஏன் உத்தரவிடக்கூடாது?
அதிகாரிகளுக்கு தண்டனை
ஐக்கிய அரபு நாடுகளில் தாய்ப்பால் குழந்தைக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவிலும் அதுபோல கட்டாயமாக்கி ஏன் சட்டதிருத்தம் கொண்டுவரக்கூடாது? மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஏன் குழந்தைகள் காப்பகம் தொடங்கக்கூடாது?, பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் பேறுகால காப்பீட்டுத்திட்டத்தை ஏன் அறிமுகம் செய்யக்கூடாது?, கருவுற்று இருக்கும் பெண் ஊழியருக்கு பேறுகால விடுப்பு வழங்காத உயர் அதிகாரிகளை சட்டப்படி தண்டிக்க ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக 2 குழந்தைகளுக்கு மேல் பேறுகால சலுகைகள் கிடையாது என்பதை ஏன் உத்தரவாதமாக பெறக்கூடாது?, நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்டு ஏன் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது? என்பது உள்ளிட்ட 15 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 22-ந் தேதிக்குள் விரிவாக பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.