தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் நிதானமாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர், சுமித் அரைசதம் அடித்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி துணை கேப்டன் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.
இந்த ஆடுகளம் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் தென்படவில்லை. அதாவது ஆடுகளத்தன்மை மெதுவாக (ஸ்லோ) காணப்பட்டதால் பந்து அதிகமாக எழும்பவே இல்லை.
இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பான்கிராப்ட் 5 ரன்னிலும், அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 14 ரன்னிலும் வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள்.
வார்னர், சுமித் அரைசதம்
இதன் பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் வார்னர் (51 ரன், 79 பந்து, 6 பவுண்டரி), பிலாண்டரின் பந்து வீச்சில் 2-வது ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 95 ஆக இருந்தது.
தொடர்ந்து ஷான் மார்ஷ் ஆட வந்தார். மார்சும், சுமித்தும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். ஷான் மார்ஷ் 19 ரன்களில் வெளியேறி இருக்க வேண்டியது. ரபடா வீசிய யார்க்கர் பந்து அவரது காலுறையை தாக்கியது. நடுவர் தர்மசேனா எல்.பி.டபிள்யூ. கொடுக்க மறுத்தார். ஆனால் இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்புகளையும் தென்ஆப்பிரிக்கா தொடக்கத்திலேயே விரயம் செய்து விட்டதால் அப்பீல் செய்ய முடியவில்லை. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெளிவாக தெரிந்தது.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் சுமித், அரைசதத்தை கடந்தார். தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளில் அவர் 50 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. சுமித்தின் போராட்டத்துக்கு சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முடிவு கட்டினார். அவரது பந்து வீச்சில் பேட்டில் பட்டு கொஞ்சம் எகிறிய பந்தை ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்ஸ் பிடித்தார். சுமித் 56 ரன்களில் (114 பந்து, 11 பவுண்டரி) நடையை கட்டினார். ஷான் மார்சும் (40 ரன்) மகராஜின் சுழலுக்கே வீழ்ந்தார். அச்சமயம் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 177 ரன்களுடன் பரிதவித்தது.
ஆஸ்திரேலியா 225 ரன்
இந்த சூழலில் கைகோர்த்த மிட்செல் மார்சும், விக்கெட் கீப்பர் டிம் பெய்னும் நிதானமாக விளையாடி அணியை சிக்கலில் இருந்து ஓரளவு மீட்டனர். 76 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்து இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
மிட்செல் மார்ஷ் 32 ரன்களுடனும், டிம் பெய்ன் 21 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.