அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு: என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்திற்கு மேல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65 சதவீதம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 35 சதவீதம் ஆகும்.
அதுவே கல்லூரி சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இந்த வருடம் முதல் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பிக்க இயலாதவர்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்துள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்த மையங்களில் விண்ணப்பிக்கும் பணிகள் அனைத்தும் இலவசம்.
என்ஜினீயரிங் படிப்பதற்கு இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் தான் உதவி மையம் மூலம் விண்ணப்பித்து உள்ளனர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (சனிக்கிழமை) கடைசிநாள் என்பது குறிப்பிடத்தகுந்தது.