அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்
ஐ.நா. அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த படைக்கு அதிகப்படியான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்திய வீரர்கள் 6,693 பேர் அபேய், சிப்ரஸ், காங்கோ, ஹைதி, லெபனான், தெற்கு சூடான், மேற்கு சகாரா ஆகிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது 96,000 வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் உள்ளனர். 15,000 அதிகாரிகளும், 1,600 தன்னார்வலர்களும் சேவையாற்றுகின்றனர். அமைதிப்படை 70-ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போர்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய ராணுவம், காவல் துறை மற்றும் பிற அதிகாரிகளைச் சேர்த்து இதுவரை 163 பேர் ஐ.நா. அமைதிப்படையில் வீர மரணம் அடைந்துள்ளனர். அமைதிப்படையில் உயிர் தியாகம் செய்தவர்களில் இது முதலிடம் ஆகும்.
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறுகையில், ஐ.நா. அமைதிப்படையில் சேவையாற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எண்ணிலடங்கா உயிர்களை காப்பாற்றியுள்ளனர். வீரமரணமடைந்த 3,700 வீரர்களையும் நாங்கள் கெளரவிக்கிறோம் என்றார்.