அமைதி, ஆரோக்கியம் முக்கியம் – நடிகர் விவேக்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், 13 பேர் பலியானதும் நாட்டையே உலுக்கி எடுத்தது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாதித்த குடும்பங்களுக்கு அரசும் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளது. நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினரும் இந்த சம்பவத்தை எதிர்த்து கருத்துக்கள் வெளியிட்டனர். போராட்டங்களும் நடத்தினர்.
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சமூக விஷயங்களை பதிவிடும் நகைச்சுவை நடிகர் விவேக் சில நாட்களாக அமைதியாக இருந்தார். அவரது டுவிட்டரில் கருத்து எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து டுவிட்டரில் விவேக் கூறியிருப்பதாவது:-
“ஏன் டுவிட்டரில் கருத்து பதிவிடுவதில்லை என்று கேட்கிறார்கள். மனம் மிக சோர்ந்து போய் இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து மீள நாட்களாகலாம். சிறு பையனின் உடலில் இருந்த தடியடி காயங்கள் என் பழைய ரணங்களை கீறி விட்டு விட்டனவே. தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கலாம். நல்லதே. ஆனால் ஒன்றை நினைவில் கொள்க. காயங்கள் ஆறினும் தழும்புகள் இருக்கும். இனி எப்போதும் எங்கும் துயரம் வேண்டாம். பொருளாதார வளர்ச்சி தேவைதான். ஆனால் அதைவிட முக்கியம் அமைதி, ஆரோக்கியம், நிம்மதி.” இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.