ஆணவத்தினாலேயே பாஜக தோல்வியை தழுவியுள்ளது: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பேச்சு
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 28-ந் தேதி சில்லி மற்றும் கோமியா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இரு தொகுதிகளிலும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமாகிய ஹேமந்த் சோரன் பேசுகையில், ”காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவில் சில்லி மற்றும் கோமியா தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்திற்கு ஆதரவாகவே இந்த வெற்றி அமைந்துள்ளது. கோமியா தொகுதியில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் பாபிடா தேவி வெற்றி பெற்றுள்ளார். மேலும் சில்லி தொகுதியில் சீமா மஹ்டோ வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தல் முடிவுகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக கட்சி, ஆணவத்தினாலேயே தோல்வியை தழுவியுள்ளது” எனக் கூறினார்.