பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு 2 எம்.பி. தொகுதிகளை பறி கொடுத்தது
கர்நாடக சட்டசபை தேர்தல் பரபரப்பு அடங்கிய நிலையில், கைரானா (உ.பி.), பால்கர் (மராட்டியம்), பந்தாரா கோண்டியா (மராட்டியம்), நாகாலாந்து (நாகாலாந்து) ஆகிய 4 எம்.பி., தொகுதிகளுக்கு கடந்த 28-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.
அதே நாளில் நூர்பூர் (உ.பி.), ஷாகோட் (பஞ்சாப்), ஜோஹிகாட் (பீகார்), கோமியா (ஜார்கண்ட்), சில்லி (ஜார்கண்ட்), செங்கணூர் (கேரளா), அம்பட்டி (மேகாலயா), தாரலி (உத்தரகாண்ட்), மகேஷ்தலா (மேற்கு வங்காளம்) மற்றும் கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் முறைகேடு புகார்களால் ஒத்திவைக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரி மவுரியா ஆகியோர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த கோரக்பூர், புல்பூர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அங்கு கைரானா தொகுதி பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யாக இருந்த ஹூக்கும் சிங் மரணம் அடைந்ததால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த எம்.பி. தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி வெற்றி பெற்று உள்ளது. அந்தக் கட்சியின் வேட்பாளர் தபசம் ஹசன் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் பாரதீய ஜனதா வேட்பாளரும், மறைந்த எம்.பி., ஹூக்கும் சிங்கின் மகளுமான மிரிகங்கா சிங்கை வீழ்த்தினார்.
இங்கு ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தகுந்தது.
மராட்டிய மாநிலம், பந்தாரா-கோண்டியா எம்.பி. தொகுதியையும் பாரதீய ஜனதா கட்சி பறிகொடுத்தது. இந்த கட்சி எம்.பி.யாக இருந்த நானா படோலே பதவி விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதனால் அங்கு நடந்த இடைத்தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் குகடே மதுக்ராவ் யஷ்வந்த் ராவ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் ஹேமந்த் பட்லே தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தது குறிப்பிடத்தகுந்தது.
மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடந்த மற்றொரு எம்.பி. தொகுதியான பால்கர் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் ராஜேந்திர கெவிட் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சீனிவாஸ் சிண்டாமன் வாங்கா தோல்வி அடைந்தார். இந்த தொகுதியை பாரதீய ஜனதா தக்க வைத்துக்கொண்டு உள்ளது.
இங்கு ஓட்டு எண்ணிக்கையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறி, தேர்தல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
நாகாலாந்து மாநிலம், நாகாலாந்து தொகுதியில் ஆளும் என்.டி.பி.பி. (தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி) வேட்பாளர் டோகேஹோ யெப்தோபி வெற்றி பெற்றார். இவர் நாகா மக்கள் முன்னணி வேட்பாளர் அபோக் ஜமீரை தோற்கடித்தார்.
ஆக 4 எம்.பி., இடங்களை ராஷ்ட்ரீய லோக்தளம், பாரதீய ஜனதா கட்சி, தேசியவாத காங்கிரஸ், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆகியவை தலா ஒரு இடம் என்ற அளவில் பகிர்ந்து கொண்டு உள்ளன.
உத்தரபிரதேசம், உத்தகாண்ட், பஞ்சாப், பீகார், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், மேகாலயா ஆகிய 9 மாநிலங்களில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 2 தொகுதிகளிலும், பா.ஜனதா, ராஷ்ட்ரீய ஜனதாதளம், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. மராட்டிய மாநிலம் பாலுஸ்கடேகான் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
உத்தரபிரதேசத்தில் தன் வசம் இருந்து கைரானா எம்.பி., தொகுதியை பாரதீய ஜனதா கட்சி, முன்னாள் மத்திய மந்திரி அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியிடம் பறி கொடுத்து உள்ளது. இதேபோன்று நூர்பூர் சட்டசபை தொகுதியையும் பாரதீய ஜனதா கட்சி, சமாஜ்வாடி கட்சியிடம் இழந்து உள்ளது.
மேலும் மராட்டிய மாநிலத்தில் பந்தாரா கோண்டியா எம்.பி. தொகுதியை தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி இழந்து உள்ளது. மொத்தம் உள்ள 11 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு இடம்தான் கிடைத்து உள்ளது. அதே நேரம், காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்து உள்ளன.
எனவே இந்த இடைத்தேர்தல் முடிவுகள், பாரதீய ஜனதா கட்சிக்கு பின்னடைவாக அமைந்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரமோத் திவாரி, “கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவும் 4 ஆண்டு கால ஆட்சி சாதனை பற்றி பேசி வருகிறார்கள். ஆனால் பல்வேறு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், அந்தக் கட்சியின் சாதனைப் பேச்சை மக்கள் நிராகரிப்பதாக அமைந்து உள்ளது” என்று கூறினார்.
இதேபோன்று, “இடைத்தேர்தல் முடிவுகள், மோடி அரசு மீது மக்கள் கொண்ட கோபத்தை காட்டுவதாக அமைந்து உள்ளன” என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்தார்.