சுவீடன் அணியிடம் பணிந்தது தென்கொரியா
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் நிஸ்னி நவ்கோரோட் நகரில் நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் சுவீடன்-தென் கொரியா (எப் பிரிவு) அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சுவீடன் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியினர் எதிரணி கோல் எல்லையை நோக்கி அடிக்கடி முற்றுகையிட்டாலும், எதிரணியின் தடுப்பு ஆட்டத்தை தகர்க்க போராட வேண்டி இருந்தது. 21-வது நிமிடத்தில் சுவீடன் அணி வீரர் மார்கஸ் பெர்க் கோலை நோக்கி அடித்த பந்து தென்கொரியா அணியின் கோல் கீப்பர் ஷோ ஹூயுன் வோவின் முழங்காலில் பட்டு மயிரிழையில் வெளியேறியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
பின் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க அதிக தீவிரம் காட்டின. 65-வது நிமிடத்தில் சுவீடன் அணி வீரர் விக்டர் கிளாசெனை, தென்கொரியா வீரர் கிம் மின், கோல் எல்லை பகுதியில் வைத்து விதிமுறைக்கு மாறாக தடுத்தார். இதனை வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்ப வசதியுடன் ஆய்வு செய்த போட்டி நடுவர் சுவீடன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார்.
இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுவீடன் அணி கேப்டன் ஆந்த்ரே கிரான்விஸ்ட் அருமையாக கோல் அடித்தார். இந்த பந்தை தென்கொரியா அணியின் கோல் கீப்பர் தடுக்க எடுத்த முயற்சிக்கு எந்தவித பலனும் கிட்டவில்லை. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க முனைப்பு காட்டினாலும், கோல் எதுவும் விழவில்லை. முடிவில் சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 1958-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் தனது தொடக்க ஆட்டத்தில் சுவீடன் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.