தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட 1,300 மதுபானக் கடைகளை மூடக் கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட 1300 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றின் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிக்குள் குறுக்கிடும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில், தமிழகத்தில் மீண்டும் 1,300 மதுபானக் கடைகள் புதிதாக திறக்கப்பட் டன. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், “தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்குள் குறுக்கிடும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து மூடப்பட்ட மதுபானக்கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்துள்ளது. ஒருபக்கம் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவோம் எனக்கூறிக் கொண்டு மறுபக்கம் சட்டத்துக்கு புறம்பாக மதுபானக்கடைகளை மீண்டும் திறந்து வருகிறது.
ஆனால் இவ்வாறு மாநகராட்சி, நகராட்சி சாலைகளை வகைப்படுத்தும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு இல்லை. எனவே சட்டவிரோதமாக மீண் டும் திறக்கப்பட்ட 1,300 மதுபானக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘இதுதொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.