தொடர்ந்து 3-வது ஆண்டாக சிறந்த நிர்வாகத்தில் கேரளா முதலிடம்: தனியார் ஆய்வு அறிக்கையில் தகவல்
சிறந்த நிர்வாகத்தை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில், தொடர்ந்து 3-வது ஆண்டாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
பிரபல பொருளாதார நிபுணர் சாமுவேல் பால், ‘பப்ளிக் அப்பேர்ஸ் சென்டர்’ (பிஏசி) என்ற பெயரில் கடந்த 1994-ம் ஆண்டு ஒரு மையத்தைத் தொடங்கினார். நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த மையத்தின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் உள்ளார்.
இந்நிலையில், நாட்டில் எந்தெந்த மாநிலம், மக்களுக்கு எப்படி சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறது என்று ஆய்வு செய்து இந்த மையம் அட்டவணை (பிஏஐ) வெளியிட்டு வருகிறது. சமூக, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த அட்டவணை வெளியிடப் படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்டவணையை பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கேரள மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 2-வது இடத்தைப் பிடித்து
இவற்றைத் தொடர்ந்து சிறந்த நிர்வாகத்தை அளிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தெலங் கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த அட்ட வணையில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் சமூக, பொருளாதார சமநிலையற்ற தன்மை அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சிறிய மாநிலங்கள் வரிசை யில் (2 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள மாநிலங்கள்) இமாச்சல பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலையில் கோவா, மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன.
அத்தியாவசிய உள்கட் டமைப்பு, மனிதவள மேம்பாட்டுக்கு ஆதரவு, சமூகப் பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகள் பாது காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு என 10 அம்சங்களை ஆராய்ந்து இந்த மையம் மாநிலங்களை தரவரிசைப்படுத்துவது குறிப்பிடத் தக்கது.
இதுகுறித்து மையத்தின் தலைவர் கஸ்தூரிரங்கன் கூறும் போது, ‘‘இளைஞர்கள் நிறைந்த இந்திய நாட்டில், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே, நாடு அதற்கேற்ப செயல்பட வேண்டும். வளர்ச்சிக் கான சவால்களை எதிர்கொள்வது குறித்து ஆராய வேண்டும்’’ என்றார்.