ரஜினியிடம் கற்றுக்கொள்வேன்! – விஜய் சேதுபதி பேட்டி
இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தது கோகுல் – விஜய்சேதுபதி கூட்டணி. தற்போது இவர்கள் ‘ஜுங்கா’ படத்தின் மூலம் மீண்டும் இணைந் திருக்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பையும் தாமே விரும்பிக் கையில் எடுத்திருக்கும் விஜய் சேதுபதியிடம் பேசியதிலிருந்து…
உங்களது படங்களில் இதுதான் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் வருகிறதே?
ஒரு நாயகன் அறிமுகமாகும்போது, அவருடைய பட்ஜெட் முடிவு செய்யப்படுகிறதா என்றால் இல்லை. அவரது வளர்ச்சியைப் பொறுத்தே பட்ஜெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. எந்த பட்ஜெட்டில் படம் பண்ணினாலும், பட்ஜெட் அதிகம் என்று சொல்லி பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். மக்களிடம் ஒவ்வொரு படமும் போய்ச் சேர்ந்துவிட்டாலும், அங்கிருந்து வரும் கணக்கைப் பொறுத்தே அப்பட நாயகரின் அடுத்த படத்தின் பட்ஜெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. என்ன பட்ஜெட்டில் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம், சரியாக மக்களிடம் சென்றுவிட்டால் போட்ட பணம் கண்டிப்பாக வந்துவிடும். அதற்கான ஏற்பாடுகளைத்தான் தயாரிப்பாளர் சங்கம் சரியாகச் செய்துகொண்டிருக்கிறது.
‘ஜுங்கா’ என்ன மாதிரியான கதை?
இந்தப் படத்தை ஒப்புக்கொண்டது கோகுல் மீதிருக்கும் நம்பிக்கையால் மட்டுமே. முதலில் ஒன் லைனாகக் கதையைச் சொன்னார். கேட்டவுடனே நடிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். காமெடியில் கோகுலுடைய டைமிங் சென்ஸ் செமையாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் பல தடவை எல்லாரும் பயங்கரமாகச் சிரித்து ஷூட் பண்ணியிருக்கிறோம். ஒரு கஞ்சத்தனமான டானுடைய கதை. அவனுடைய சூழல் காரணமாக வெளிநாடு செல்கிறான். அவ்வளவு பணக்கார நாட்டிலும் டான் என்ற கெத்துடன் இருக்கிறான். அப்போது என்னவாகிறது என்பதை காமெடியாகச் சொல்லியிருக்கிறோம். நான் இதுவரை நடித்த படங்களில் அதிக நாட்கள் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படம் இதுதான்.
மாறுபட்ட கதைக் களத்தில் தொடர்ச்சியாகப் பயணித்துக் கொண்டே இருக்கிறீர்களே?
ஒளிப்படக்கலைஞர், 80 வயது முதியவர், திருநங்கை எனப் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான கதைகளில் விரும்பி நடிக்கிறேன். ஒரு நடிகனாக இருப்பது நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பெரிதாகப் பணத்தேவை இல்லை. அதனால் பணத்துக்காக ஓட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆற அமரக் கதைகேட்டு, கேட்டதை மனதுக்குள் ஓடவிட்டு, வெவ்வேறு வித்தியாசமான படங்களில் நடிக்கும்போது நாட்கள் அர்த்தபூர்வமாக நகர்கின்றன.
ஒரு கட்டத்தில் நடிப்புக்குத் தீனி கேட்கும் கதாபாத்திரங்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு அந்தத் தீனி நிறையத் தேவைப்படுகிறது. மக்களுக்கு இந்தக் கதைகள்தாம் பிடிக்கும் என நினைக்கிறார்கள். மக்களுடைய ரசனை என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது.
ரஜினியுடன் வில்லனாக நடிக்கப்போவ தாகச் செய்தி வெளியாகியிருக்கிறதே?
கார்த்திக் சுப்பராஜ், மணி கண்டன், சீனுராமசாமி போன்ற சில இயக்குநர் களிடம் கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொள்வேன். ரஜினியை ஒரு யுனிவர்சிட்டியாகப் பார்க்கிறேன். அதில் மாணவனாகக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவருடன் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் பெருமையே.
உங்களைப் போன்ற பிரபல நடிகர்களின் முந்தைய படத்தின் வெற்றியே, அடுத்த படத்தின் வியாபாரத்தை எதிர்நோக்கி இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
உண்மைதான். நமது தகுதிக்கு மீறி சம்பளம் கேட்டால் ஒரு ரூபாய் கூட கூடுதலாகக் கொடுக்க மாட்டார்கள். தற்போது கதாநாயகர்களின் சம்பளத்தை அவர்கள் நிர்ணயிப்பதில்லை. அது மற்றவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகில் படம் ஓடினால் லாபக் கணக்கு வரவே வராது. அதே படம் ஓடாவிட்டால் நஷ்டக் கணக்கு உடனே வந்துவிடும். எல்லா நடிகர் களுக்கும் வித்தியாசமான படங்களில் நடிக்க ஆசைதான். ஆனால், வியாபாரம் மட்டுமே யோசிக்க வைக்கிறது. 1947-ல் எனது படம் வெற்றியடைந்திருந்தால் இப்போது யாருமே என்னைக் கொண்டாடிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
சினிமாவில் கதாநாயகர்கள் புகைப்பதுபோல் நடிப்பதால்தான் இளைஞர்கள் மத்தியில் புகைப் பழக்கம் அதிகமாகிறது என்ற சர்ச்சை மீண்டும் கிளம்பியிருக்கிறதே?
சில நண்பர்கள் சகவாசத்தால் நானும் புகைபிடிக்கிறேன். பல ஆண்டுகளாக அதை விட முயல்கிறேன். ஆனால், முடியவில்லை. என்னுடன் வாழ்ந்து, புகையால் இறந்த ஒருவர் சொல்லியும் என்னால் முடியவில்லை. புகை தீங்கானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நடிகர்கள் புகைப்பதுபோல் நடிப்பதால் மட்டுமே, அப்பழக்கம் அதிகமாகப் பரவுகிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
சினிமாவைப் பொறுத்தவரை, கதைக்கும் கதாபாத்திர குணாதிசயத்துக்கும் அவசியத் தேவை அமைந்தால் அன்றி, தம் அடிக்கும் காட்சியை வேண்டுமென்றே சினிமாவில் திணிக்கக் கூடாது. இப்போது ரசிகர்கள் தெளிவாகிவிட்டார்கள். நடிகர்கள் தம் அடிக்கிறார்கள், நாமும் அடிக்கலாம் என்று அவர்கள் செய்வதில்லை. அந்த அளவுக்கு ரசிகர்கள் விவரம் தெரியாதவர்கள் கிடையாது.