‘சுப்ரீம் கோர்ட் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்’
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விசாரிக்கும், அரசியல் சாசனம் தொடர்பான வழக்குகளை, சோதனை அடிப்படையில், நேரடி ஒளிபரப்பு செய்யலாம்’ என, சுப்ரீம் கோர்ட்டில்,மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
பொதுநல வழக்கு :
சுப்ரீம் கோர்ட்டில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதை, நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி, மூத்த வழக்கறிஞர், இந்திரா ஜெய்சிங், பொதுநலன் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திர சூட் அடங்கிய அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘நீதிமன்ற நடவடிக்கைகள், நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. ‘இவ்விஷயத்தில், சம்பந்தப்பட்டோர், தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்’ என, நீதிபதிகள் கூறினர். மேலும், ‘பாலியல் பலாத்கார வழக்குகள் உட்பட ஒரு சில வழக்குகள் தவிர, பிற வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சாசனம் தொடர்பான வழக்குகளை, சோதனை முறையில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.
ஆய்வு :
முதற்கட்டமாக, 1 – 3 மாதங்கள், இந்த திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி, தொழில் நுட்ப முறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்யலாம். பின், தேவைப்படும் மாற்றங்களை செய்து, திட்டத்தை முழுமையாக அமல்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த வழக்கு, வரும், 30க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.