இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுறவு அவசியம்: பிடிஐ கட்சி தலைவர் இம்ரான் கான் வலியுறுத்தல்
இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டியது அவசியம் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி யின் (பிடிஐ) தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி போட்டியிடுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஆகியோர் தற்போது பல்வேறு வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருவதால், அவர்களுடைய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு இல்லை எனக் கூறப்படுகிறது.
அதேசமயத்தில், பாகிஸ்தானை மறு சீரமைப்பதற்கான கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இம்ரான்கானுக்கு, மக்கள் ஆதரவு அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பொதுத்தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலை யில், அந்நாட்டு தனியார் தொலைக்காட்சிக்கு இம்ரான் கான் நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது நிலவும் ஒரே பிரச்சினை காஷ்மீர் விவகாரம் மட்டுமே. காஷ்மீர் பிரச்சினையால் ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டமே முடங்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்பட்டால், வர்த்தகம் மேம்பட்டு இரு நாடுகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். எனவே, இரு நாடுகள் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டியது அவசியம். இந்த சமயத்தில், இந்தியாவுடன் நல்லுறவைப் பேண முயன்ற பாகிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இம்ரான்கான் தெரி வித்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக் கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 272 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் ஒருசேர நடைபெறவுள்ள இத்தேர்தலில், 10.5 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய் வதற்காக, நாடு முழுவதும் 3.70 லட்சம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்..