கும்பல் வன்முறையை தடுக்க தேவைப்பட்டால் சட்டம் இயற்றப்படும்: மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
கும்பலாகச் சேர்ந்து வன்முறை மற்றும் கொலையில் ஈடுபடுவதை தடுக்க, தேவைப்பட்டால் அரசு சட்டம் இயற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பசுப் பாதுகாப்பு என்ற பெய ரிலும் குழந்தைகள் கடத்தல் வதந்தியாலும் மக்கள் கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடு வதும், சந்தேகத்திற்குரிய நபரை அடித்துக் கொல்வதும் நாட்டில் அதிகரித்து வருகிறது. இதில் சமீபத்திய சம்பவமாக ராஜஸ்தா னின் அல்வார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 28 வயது நபர் ஒருவர் பசுக்களைக் கடத்திச் செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டார்.
கும்பல் வன்முறையை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கு மாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அறி வுறுத்தியிருந்தது. இதையடுத்து கும்பல் வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்களைத் தடுப் பதற்கான பரிந்துரைகளை அளிக்க இரு உயர்நிலை குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.
மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பின. உறுப்பினர்கள் சிலர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். கும்பல் கொலையை தடுக்க தேவைப்பட்டால் சட்டம் இயற்றப்படும்” என்றார்.
ராஜ்நாத் சிங் மேலும் பேசும் போது, “கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடும் சம்பவங் கள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதில் மிகப்பெரிய சம்பவம் 1984-ல் நடந்தது” என்றார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “கும்பல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
துணை சபாநாயகர் தம்பி துரை பேசும்போது, “இந்த சம்பவங்களுக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறிய வேண் டும். சட்டம் ஒழுங்கை பராமரிப் பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.