கிட்கேட் சாக்லேட்டின் வடிவம் யாருக்குச் சொந்தம்?
நெஸ்லே நிறுவனத்த்தின் தயாரிப்பான கிட்கேட் சாக்லேட்டின் நான்கு-கூறுகளாக செதுக்கப்பட்ட செவ்வக வடிவம் தங்களுக்கு சொந்தமான வணிகச் சின்னம் (trademark) என்று தீர்ப்பளிக்க அந்நிறுவனம் விடுத்த கோரிக்கையை ஏற்க ஐரோப்பிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தன் போட்டி நிறுவனமான கேட்பரிக்கு எதிராக இந்த வழக்கை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெஸ்லே நடத்தி வந்தது.
ஐரோப்பிய கண்டத்தின் வணிகச் சின்னங்களை வழங்கும் குழு அந்த வடிவத்தை பயன்படுத்தும் உரிமையை நெஸ்லே நிறுவனதுக்கு வழங்கியது தவறு என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பால் அந்த வடிவத்தில் சாக்லேட் தயாரிக்க இருந்த தடை, நார்வேயின் ‘குயிக் லன்ச்’ உள்ளிட்ட சாக்லேட் நிறுவனங்களுக்கு நீங்கியுள்ளது.
தொடக்கத்தில் ‘ரௌண்ட்ரீ’ என்ற பெயரில் 1935இல் சந்தைக்கு வந்த கிட்கேட் சாக்லேட்டுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து ‘குயிக் லன்ச்’ நிறுவனம் 1937இல் தொடங்கப்பட்டது.
நெஸ்லே நிறுவனம் பிரச்சனையைக் கிளப்பும் வரை 65 ஆண்டுகள் அந்த இரு நிறுவனங்களின் சாக்லேட்டுகளும் ஒரே வடிவத்தில்தான் இருந்தன.
2002இல் கிட்கேட் சாக்லேட்டின் நான்கு-கூறுகளாக செதுக்கப்பட்ட செவ்வக வடிவத்துக்கு காப்புரிமை கோரி நெஸ்லே விண்ணப்பித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் கிட்கேட் சாக்லேட்டுக்கு அந்த உருவத்தை பயன்படுத்தும் உரிமையை வழங்கியது.
குயிக் லன்ச் சாக்லேட்டுகளைத் தயாரிக்கும் மோன்டலீஸ் நிறுவனம்தான் கேட்பரி, மில்கா, ஓரியோ உள்ளிட்ட பெயரில் சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கிறது.
கிட்கேட் சாக்லேட் மட்டுமே அந்த உருவத்தைப் பயன்படுத்த கிடைத்த அனுமதியால் 2007 முதல் கேட்பரி மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் நீதிமன்றப் படிகளை அடிக்கடி ஏறி வந்தன.
கிட்கேட் சாக்லேட்டுகள் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் அறியப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கீழமை நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், போர்ச்சுகல், அயர்லாந்து, பெல்ஜியம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் தங்கள் தயாரிப்பான கிட்கேட் பிரபலம் பெற்றதற்கான ஆதாரங்களை நெஸ்லே நிறுவனத்தால் வழங்க முடியவில்லை.
நெஸ்லே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிகச் சின்னங்களை வழங்கும் குழு ஆகியன இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தன. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் தங்கள் இருப்பு உள்ளது என்று காட்ட வேண்டுமானால், எந்த நிறுவனமும் அந்த நிலையை அடையவில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.
கிட்கேட் சாக்லேட் பரவலாக அறியப்பட்ட பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் அந்த சாக்லேட்டுக்கு என்று தனித்தன்மை எதுவும் கிடையாது என்று மோன்டலீஸ் நிறுவனம் வாதிட்டது.
ஐரோப்பிய நீதிமன்றம் எந்தத் தரப்பின் வாதங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தயாரிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கணிசமான பகுதிகளில் மட்டும் பரவலானதாக இருந்தால் போதாது, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் சந்தையிலும் பரவலாக இருந்தால்தான் ஐரோப்பிய அளவிலான வணிகச் சின்னம் பயன்படுத்தும் உரிமையை பெற முடியும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இப்போது கிட்கேட் சாக்லேட்டின் வடிவம் ஐரோப்பிய ஒன்றியம் முழுதும் தங்கள் வணிகச் சின்னம் என்ற அங்கீகாரத்தை நெஸ்லே இழக்க உள்ளது. எனினும் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் நெஸ்லே தனியாக வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.