ஜீவனாம்சத்தை சில்லரையாக கொடுத்த கணவர்: ரூ.24,600-ஐ எண்ண முடியாமல் பஞ்சாப் நீதிமன்றத்தில் பரபரப்பு
முன்னாள் மனைவிக்கு தர வேண்டிய ரூ.25 ஆயிரம் ஜீவனாம்ச தொகையை, சில்லரையாக வழக்கறிஞர் கொண்டு வந்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் அவரது மனைவியும் விவாகரத்து கேட்டு கடந்த 2015-ம் ஆண்டு வழக்குத் தொடுத்துள்ளனர். அதன்பின்னர் ஜீவனாம்ச வழக்கில், மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் பராமரிப்பு செலவுக்குத் தர வேண்டும் என்று பஞ்சாப் மாநில கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால், 2 மாதங்களாக அவர் ஜீவனாம்சம் தரவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவரது முன்னாள் மனைவி மனு தாக்கல் செய்தார். அப்போது 2 மாத தொகை ரூ.50 ஆயிரத்தை தரவேண்டும் என்றும் இனிமேல் மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் பராமரிப்பு தொகையைத் தர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ரஜ்னிஸ்க் கே சர்மா முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் மனைவிக்குத் தர வேண்டிய ரூ.25 ஆயிரத்தை 2 பெரிய பைகளில் வழக்கறிஞர் கொண்டு வந்திருந்தார்.
பைகளைப் பிரித்து பார்த்த போது, அவற்றில் ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் இருந் தன. அதைப் பார்த்து நீதிபதியும், மற்றவர்களும் அதிர்ச்சி அடைந் தனர். மேலும் சில்லரைகளைப் பார்த்து எரிச்சலடைந்த முன்னாள் மனைவி, ‘‘என்னை சித்ரவதை செய்வதற்கு இது ஒரு புது வழி. மேலும், அவர் இந்த நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறார். இந்த வழக்கில் பல வாய்தாக்களுக்குப் பிறகு முதல்முறையாக பணத்தை தருகிறார். இப்போது அந்தப் பணத்தையும் சில்லரையாகத் தருகிறார். இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது. எந்த வங்கியிலும் இதை வாங்க மாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.
ஆனால், வழக்கறிஞர் கூறும்போது, ‘‘ஜீவனாம்ச தொகை மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி ரூ.100, ரூ.500 அல்லது ரூ.2000 என்ற நோட்டுகளில் பணத்தைத் தரவேண்டும் என்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. இந்த சில்லரைகளை எண்ணுவதற்கு கூட, நான் 3 ஜூனியர் களை உதவிக்கு அழைத்து வந்துள்ளேன்’’ என்று கூறினார்.
கடைசியில் பைகளில் இருந்த சில்லரைகளை எண்ணிய போது ரூ.24,600 இருந்தது. மீதி 400 ரூபாயை ரூ.100 நோட்டுகளாக வழக்கறிஞர் அளித்தார். அதற்குள் நீதிமன்ற நேரம் முடிந்துவிட்டதால், வழக்கை நீதிபதி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்தச் சம்பவத் தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.