மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர்வரத்தால் கொள்ளிடம் ஆற்றில் 39,498 கனஅடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டதால், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள் ளிடம் ஆற்றில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அதிக அளவாக 39,498 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள காவிரி யின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையைத் தொடர்ந்து கர்நாடகத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப் பட்டதால் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் காலை முதல் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, காவிரியில் அதிக தண்ணீர் திறப்பை தவிர்க் கும் வகையில் நேற்று முன்தினம் மாலை முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கொள் ளிடம் ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால், கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட் டூர் அணையின் நீர்மட்டம் 120.21 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 64,492 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 63,902 கன அடியாகவும் இருந்தது.
மேட்டூர் அணையில் திறக்கப் பட்ட கூடுதல் தண்ணீர் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந் தடைந்தது. இங்கிருந்து காவிரி யில் 30,067 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கொள்ளிடம் (தெற்கு பிரிவில்) 32,317 கனஅடி, கொள்ளிடம் (வடக்கு பிரிவில்) 7,181 கனஅடி என மொத்தம் 39,498 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால், நீர் இரு கரைகளை யும் தொட்டுச் செல்கிறது. இந்த தண்ணீர் நெ.1 டோல்கேட் அருகே கொள்ளிடம் கரையோரம் உள்ள குடிசைகளைச் சூழ்ந்தது. இந்த குடிசைகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே ஆற்றில் கழுவுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு ஆட்டோ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு 29,044 கனஅடி செல்கிறது.
கல்லணையில் இருந்து காவிரியில் 9,512 கனஅடியும், வெண்ணாற்றில் 9,014 கனஅடியும், கல்லணைக் கால்வாயில் 2,752 கனஅடியும், கொள்ளிடத்தில் 7.766 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.