வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் தூக்கி சென்ற அவலம்
மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே திகாம்கார்ஹ் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்படவே, வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் அவரை மருத்துவமனைக்கு கட்டிலில் தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஏ. என். ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், திகாம்கார்ஹ் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க குடும்பத்தார்கள் ஆம்புலன்ஸ் சேவை எண்ணான 108-ஐ தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தன்னால் வர இயலாது என ஆம்புலன்ஸ் டிரைவர் காரணம் கூறியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தார்கள் வேறு வழியின்றி வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் கட்டிலில் தூக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், பாம்பு கடித்து உயிரிழந்த குன்வார் பாய் என்னும் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வாகனம் தருமாறு மோஹன்ஹார்க் மாவட்ட மருத்துவமனைக்கு குடும்பத்தார்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வாகனம் தர மறுத்தது. இதனால் இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெண்ணின் மகன் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். மத்தியபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து இது போல் மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.