தாஜ்மகாலை பாதுகாக்கும் விவகாரம்: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
தாஜ்மகாலை பாதுகாக்கும் விவகாரத்தில் உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
தாஜ்மகாலை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தாஜ்மகாலை பாதுகாப்பது தொடர்பான தொலைநோக்கு ஆவண வரைவு அறிக்கை உ.பி. அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “எதற்காக வரைவு அறிக்கையை தாக்கல் செய்கிறீர்கள்? இதில் நாங்கள் திருத்தம் செய்ய வேண்டுமா? இதுதான் எங்களின் பணியா?” என கேள்வி எழுப்பினர்.
தாஜ்மகாலை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தை கலந்து ஆலோசிக்காமல் வரைவு அறிக்கை தயாரித்ததற்கு நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர்.
மேலும், “தாஜ்மகாலை உலகின் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவோம் என யுனெஸ்கோ கூறினால் என்ன ஆகும்? தாஜ்மகால் பாதுகாப்பு மண்டலத்தை பராமரி்ப்பது மத்திய, மாநில அரசின் எந்தத் துறையின் பொறுப்பாகும்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
“தாஜ்மகாலை பாதுகாப்பது மற்றும் தாஜ்மகால் பாதுகாப்பு மண்டலத்தை மேம்படுத்துவற்கான பொறுப்பை ஒரே அமைப்பு ஏற்க வேண்டும். இந்த அதிகார அமைப்பை மத்திய, மாநில அரசுகள் அடையாளம் காண வேண்டும்.
இந்த வரைவு அறிக்கையை தொல்பொருள் பாதுகாப்பு நிபுணர்களிடம் அளித்து அவர்களின் கருத்துகளை உ.பி. அரசு பெறவேண்டும். தாஜ்மகாலை மீட்டு எடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆகஸ்ட் 28-ம் தேதி உ.பி. அரசு தெரிவிக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தாஜ்மகால் பாதுகாப்பு மண்டலம் 10,400 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. உ.பி.யின் ஆக்ரா, பிரோசாபாத், மதுரா, ஹத்ரஸ் ஆகிய மாவட்டங்களிலும் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்திலும் இந்த மண்டலம் பரவியுள்ளது.