மோசமான போட்டி அட்டவணை: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்க கூடாது – ஷேவாக் வலியுறுத்தல்
6 அணிகள் இடையிலான 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி செப்டம்பர் 18-ந்தேதி தகுதி சுற்று அணியையும், செப்டம்பர் 19-ந்தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.
போட்டி அட்டவணை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையை பார்த்ததும் உண்மையிலேயே அதிர்ச்சியாகி விட்டது. செப்டம்பர் 18-ந்தேதி தகுதி சுற்று அணியுடன் மோதும் இந்திய அணி, மறுநாளிலேயே பாகிஸ்தானை சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் எந்த அணி அடுத்தடுத்த நாட்களில் விளையாடுகிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம். இங்கிலாந்தில் நமது அணி 20 ஓவர் போட்டிகளில் ஆடிய போது கூட ஒவ்வொரு போட்டிக்கும் 2 நாள் இடைவெளி இருந்தது. ஆனால் இங்கு கடுமையான வெயிலுக்கு மத்தியில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓய்வின்றி ஆட வேண்டி உள்ளது. என்னை பொறுத்தவரை இது சரியான போட்டி அட்டவணை கிடையாது.
அடுத்தடுத்த நாட்களில் ஆடுவது மிகவும் கடினம் என்பதால் போட்டி அட்டவணையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அணி ஆசிய கிரிக்கெட்டில் பங்கேற்க கூடாது. அதற்கு பதிலாக அடுத்து வரும் போட்டிகளுக்கு தயாராவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு நாள் போட்டியில் ஒரு வீரர் விளையாடினால் அதன் பிறகு குறைந்தது 48 மணி நேரம் ஓய்வு தேவை. ஏனெனில் 3½ மணி நேரம் பீல்டிங் செய்ய வேண்டும். அதன் பிறகு 2 மணிநேரம் பேட் செய்தால் மொத்தம் 5½ மணி நேரம் மைதானத்திலேயே நேரத்தை செலவிட்டிருப்பார். இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் புத்துணர்ச்சி பெற அந்த வீரருக்கு 24 மணி முதல் 48 மணிநேரம் அவசியமாகும்.
இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் சமயத்தில், துபாயில் வெயில் வாட்டி வதைக்கும் காலமாகும். அதிகமான வெயிலில் நமது வீரர்கள் விளையாடும் போது சோர்வில் இருந்து மீண்டு வர தாமதமாகும். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவுடன் விளையாடுவதற்கு முன்பு 2 நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஆனால் இந்திய வீரர்களுக்கு ஓய்வு கிடையாது. பாகிஸ்தானுடன் எப்போது மோதினாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் மோசமான போட்டி அட்டவணையால் இந்திய வீரர்கள் களைத்து போனால், நிச்சயம் அது பாகிஸ்தான் அணிக்கே சாதகமாக இருக்கும். இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.