ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆணைய வக்கீல்கள் ஆய்வு
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா தனது வாக்குமூலத்தை வக்கீல்கள் மூலம் ஆணையத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என 75-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ‘ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள பெரும்பாலானோர், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அங்குள்ள இயற்கை அமைப்புகளையும் ஒட்டியே சாட்சியம் அளித்துள்ளனர். எனவே, அப்பல்லோ மருத்துவமனையின் இயற்கை அமைப்பு என்ன?, உண்மை தன்மை என்ன? என்பதை ஆணையத்தின் தரப்பில் அறிந்து கொள்வது அவசியம்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையத்தின் வக்கீல்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தவும், அப்போது சசிகலா தரப்பு வக்கீல்கள் உடன் செல்ல அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008, அங்குள்ள செவிலியர் அறை, கண்ணாடி அறை, அங்குள்ள நடைபாதை, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்த இடம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழு, அரசு செயலாளர்கள் போன்றவர்கள் இருந்த இடம், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அவ்வப்போது மருத்துவர்கள் விளக்கிக்கூறிய இடம், சசிகலா, அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கி இருந்த அறை, ஜெயலலிதாவுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்ட சமையல் அறை ஆகியவற்றை ஆணையத்தின் வக்கீல்கள் நேற்று இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ¾ மணி நேரம் ஆய்வு செய்தனர்.
ஆணைய வக்கீல்களுடன் சசிகலா தரப்பு வக்கீல்கள் ராஜா செந்தூர்பாண்டியன், அரவிந்தன், ஆணையத்தின் செயலாளர் கோமளா ஆகியோர் உடன் சென்றனர்.
இந்த ஆய்வின் போது தன்னையும், தனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா ஆணையத்தில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட இடங்களை ஆணைய வக்கீல்கள் ஆய்வு செய்த பின்பு ஜெ.தீபா, அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி, ஜெ.தீபா தனது வக்கீலுடன் நேற்று இரவு 8.15 மணி முதல் 8.40 மணி வரை ஆணைய வக்கீல்கள் ஆய்வு செய்த அனைத்து இடங்களையும் பார்வையிட்டார். ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவரை மருத்துவமனைக்குள் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதைத்தொடர்ந்து ஜெ.தீபா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்வரை மாதவன் மருத்துவமனை முன்பு காத்திருந்தார்.
ஆய்வை முடித்து விட்டு வெளியே வந்த ஆணையத்தின் வக்கீல்கள், ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டோம். ஆய்வுக்கு மருத்துவமனை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்தது. சாட்சிகளிடம் இனிவரும் காலங்களில் நடைபெறும் விசாரணைக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.
சசிகலா தரப்பு வக்கீல்கள் கூறும்போது, ‘ஆய்வுக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்தது. அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக சிகிச்சை அளித்தார்கள் என்பதை இங்கு வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டோம்’ என்றனர்.
ஜெ.தீபா கூறும்போது, ‘எனது அத்தை ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைகளை பார்வையிட்டேன். அவர் வெகு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அறையை தற்போது அறுவை சிகிச்சை கூடமாக (ஆபரேசன் தியேட்டர்) மாற்றி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மருத்துவமனை வழிகாட்டுதல்படி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா? என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதால் வழக்கு ரீதியாக அதை சந்திக்க உள்ளேன்’ என்றார்.