கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது
கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. வெள்ளம் சூழ்ந்திருப்பதால் கொச்சி விமான நிலையம் 18-ந் தேதி வரை மூடப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் நேற்றும் கனமழை பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.
இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 15.74 லட்சம் லிட்டரும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 10 லட்சம் லிட்டரும் நீர் திறக்கப்பட்டு இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 142 அடியை எட்டியதால் நேற்று அதிகாலையில் அணை திறக்கப்பட்டது.
இதனால் மாநிலத்தில் பாயும் ஆறுகளில் வெள்ள நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. அவற்றின் கரையோரங்களில் வாழும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து பெரியாறு நதிக்கரையோரம் வசித்து வரும் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களுக்கு இடமாற்றப்பட்டனர்.
முல்லைப்பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை தொடர்ந்து, அந்த அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அணையின் பாதுகாப்பு கருதி கேரளா விடுத்துள்ள இந்த கோரிக்கையை, தமிழக தலைமைச் செயலாளருக்கு தெரிவித்து அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க மத்திய உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுப்பார் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளார்.
மாநிலத்தில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பீர்மேட்டில் 27 செ.மீ., இடுக்கியில் 23 செ.மீ., மூணாறில் 22 செ.மீ. மழை பொழிந்து இருக்கிறது. மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகமிக கனமழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 14 மாவட்டங்களுக்கும் கடும் அபாய (ரெட் அலெர்ட்) எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், அணைகள் திறக்கப்பட்டு உள்ளதாலும் கண்ணூர், கோழிக்கோடு மலப்புரம், இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
மூணாறில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காரைக்குடியை சேர்ந்த மதன்குமார் (வயது 29) என்ற வாலிபர் உயிரிழந்தார். இவ்வாறு மாநிலம் முழுவதும் நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், மின்சாரம் தாக்கியுமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டுமே 25 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 பேர் மாயமாகி இருக்கின்றனர். ஆலப்புழா அருகே மீன்பிடி படகு ஒன்று நேற்று அதிகாலையில் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 7 மீனவர்களில் 4 பேரை கடற்படையினர் மீட்டனர். மாயமான 3 பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தை சூழ்ந்துள்ளது. ஓடுபாதை மற்றும் சுற்றுவட்டார இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் விமான நிலையம் 18-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பம்பை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல வேண்டாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை கேரள கவர்னர் சதாசிவம் நேற்று ரத்து செய்தார்.
நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளால் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. சுற்றுலாத்தலமான மூணாறு பகுதி துண்டிக்கப்பட்டு தீவு போல காணப்படுகிறது.
மின்சாரம், சாலைகள் துண்டிப்பு, தண்டவாளங்களில் நிலச்சரிவு போன்ற இடையூறுகளால் பஸ், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து 23 ஆயிரம் பேர் உள்பட 1½ லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் அவதிப்படுகின்றனர்.
மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கூடுதல் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கேரளாவுக்கு விரைந்துள்ளனர். குறிப்பாக இடுக்கி, ஆலுவா பகுதிகளில் சென்னை ரெஜிமென்டின் 2 படைப்பிரிவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதைப்போல கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களுக்கும் ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்த நெருக்கடி நேரத்தில் மத்திய அரசு, கேரள மக்களுடன் உறுதியாக நிற்கும். மாநிலத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று உறுதியளித்தார்.
திருவனந்தபுரத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன், தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் வரலாறு காணாத சூழலை மாநிலம் சந்தித்து வருவதாக கூறினார். எனினும் அனைவரும் கரம் கோர்த்தால் இந்த பேரழிவில் இருந்து மீண்டுவரமுடியும் என அவர் நம்பிக்கையும் தெரிவித்தார்.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் குழித்துறை மற்றும் இரணியல் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் பாதையில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், பல ரெயில்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டன.
பினராயி விஜயன் வேண்டுகோள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தை புரட்டிப்போட்டுள்ள இந்த பேரழிவு குறித்து கூறியதாவது:-
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் திறக்கப்பட்டு உள்ளன. இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நிலைமையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். குடிநீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள் அனைத்தும் மழை நீரால் பழுதடைந்து விட்டன. எனவே மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
மிகுந்த நெருக்கடியில் சிக்கி இருக்கும் எங்களுக்கு அண்டை மாநிலங்கள் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றன. அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மழை நின்ற பின்னும் எங்களுக்கு அதிகமான உதவி தேவைப்படும். அவற்றை பூர்த்தி செய்யவும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.