ஆசிய விளையாட்டில் இருந்து டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் விலகல்
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் மூத்த வீரர் 45 வயதான லியாண்டர் பெயசும் இடம் பிடித்து இருந்தார். 2010, 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பங்கேற்காத லியாண்டர் பெயஸ் இந்த முறை அணித்தேர்வுக்கு தயாராக இருப்பதாக கூறிய பிறகே அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இரட்டையர் பிரிவில் சுமித் நாகல் அல்லது ராம்குமார் ஆகியோரில் ஒருவருடன் இணைந்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய டென்னிஸ் வீரர்கள் நேற்று இந்தோனேஷியாவுக்கு சென்றடைந்த நிலையில் லியாண்டர் பெயஸ் அவர்களுடன் இல்லை. இது குறித்து இந்திய டென்னிஸ் அணியின் கேப்டனும், பயிற்சியாளருமான ஜீஷன் அலியிடம் கேட்ட போது ‘லியாண்டர் பெயஸ் எப்போது இந்தோனேஷியாவுக்கு வருவார் என்பது எனக்கு தெரியாது. இதை அவர் தான் சொல்ல வேண்டும். கடைசியாக நான் அவரிடம் பேசிய போது, சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் விளையாடிவிட்டு அங்கிருந்து நேரடியாக இந்தோனேஷியாவுக்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். ஆனால் அவர் சின்சினாட்டியிலும் விளையாடவில்லை என்பது தெரிய வந்துள்ளது’ என்று கூறினார்.
இந்த நிலையில் லியாண்டர் பெயஸ் ஆசிய விளையாட்டில் இருந்து விலகுவதாக நேற்றிரவு அறிவித்தார். ‘நான் பல முறை வேண்டுகோள் விடுத்தும், இரட்டையரில் சிறப்பு வாய்ந்த வீரரை எனக்கு ஜோடியாக ஒதுக்காமல், ஒற்றையர் பிரிவில் ஆடும் வீரர்களுடன் கைகோர்க்கும்படி கூறினார்கள். இதனால் வேறு வழியின்றி ஆசிய விளையாட்டில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். எனது விலகலால் ஆசிய விளையாட்டில் டென்னிசில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பாதிக்காது’ என்று பெயஸ் விளக்கம் அளித்துள்ளார். லியாண்டர் ஆசிய விளையாட்டில் இதுவரை 5 தங்கம் உள்பட மொத்தம் 8 பதக்கம் கைப்பற்றி இருப்பது நினைவு கூரத்தக்கது.