இன்று திருமாவளவன் பிறந்தநாள்: தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை நடுவதற்கு திட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்டு மாதம் 17-ந்தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் அவருடைய கட்சியினர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்தநாள் இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பிறந்தநாளை எப்படி கொண்டாட திட்டமிட்டு இருக்கிறீர்கள்? என்பது குறித்து தொல்.திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
பனை விதைகளை நட திட்டம்
கேள்வி:- ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய பிறந்தநாளை கட்சியினர் எழுச்சியோடு கொண்டாடுவார்கள். அதேபோல் இந்த ஆண்டு எதை மையமாக வைத்து கொண்டாட இருக்கிறார்கள்?
பதில்:- இயற்கை வளத்தை பாதுகாப்பது என்பது தற்போது பெரும் சவாலாக இருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு இயற்கை வளம் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இயற்கை வளத்தை பாதுகாப்பதில் பனை மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பனை மரத்தால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்பதை காட்டிலும், அது மண் அரிப்பை தடுக்கிறது. ஈரப்பதத்தை பாதுகாப்பதுடன், காற்றின் ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. இதுதான் பருவமழைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே இந்த பிறந்தநாளில் பனை விதைகளை நட்டு, பனை மரத்தை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். 30 அடி உயரத்தில் 120 ஆண்டு காலம் உயிர் வாழும் இந்த பனை மரத்தை இந்த ஆண்டு மட்டுமல்லாது, ஒவ்வொரு ஆண்டும் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரி, குளம், குட்டை, ஆறு, ஓடை கரையோரங்களில் பனை விதைகளை விதைப்பது எங்களுடைய இலக்காகும்.
ஒரு லட்சம் விதைகள்…
கேள்வி:- எவ்வளவு பனை விதைகள் நடப்பட இருக்கிறது. இதில் கட்சி தொண்டர்களை எவ்வாறு ஈடுபடுத்த போகிறீர்கள்?
பதில்:- ஆகஸ்டு 17-ந்தேதி(இன்று) முதல் 31-ந்தேதிக்குள் ஒரு லட்சம் பனை விதைகள் நடப்பட இருக்கிறது. கட்சி நிர்வாக ரீதியாக 90 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. 90 மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் இணைந்து குறைந்தது தலா 1,000 விதைகளை விதைக்க வேண்டும். என்னுடைய பிறந்தநாள் மட்டுமல்லாது, இனிவரும் நாட்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பிறந்தநாளிலும் அவரவர் 100 பனை விதையாவது விதைக்க வேண்டும். அதேபோல், கடற்கரையோரங்களில் பனை மரங்களை வளர்த்து, மண் அரிப்பை தடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு பனை பொருள் வாரியத்தை மீண்டும் சிறப்பாக நடத்தக்கோரி விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.